Saturday, September 14, 2024

சினிமா வரலாறு – 82 – கலைவாணரின் கடைசி மாணவரான ‘குலதெய்வம்’ ராஜகோபால்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1960-களில் தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராக கொடிகட்டிப் பறந்தவர் ‘குலதெய்வம்’ ராஜகோபால். நாடக நடிகராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய ராஜகோபால், கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்களின் இயக்கத்திலே ஏவி.எம். நிறுவனம் தயாரித்த ‘குலதெய்வம்’ படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்தப் படத்தில் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில்  மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றதால் அதுவரையிலே  ‘ராஜகோபாலாக’ இருந்த   அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘குலதெய்வம்’ ராஜகோபால் ஆனார்.

சிறுவயது முதலே அவர்  கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மிகத் தீவிர ரசிகர். ராஜகோபால் நடித்த ‘எதிர்பாராதது’ என்ற நாடகம் நாகர்கோவிலில் நடைபெற்றபோது அந்த நாடகத்துக்கு தலைமை தாங்க வந்த என்.எஸ்.கிருஷ்ணன்  ராஜகோபாலின் நடிப்பைப்  பாராட்டியது மட்டுமின்றி “இந்த மாதிரி திறமையான கலைஞர்கள் எல்லாம் மேம்போக்காக நடித்துவிட்டுப் போகாமல் கலைத்துறையில் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ள  வேண்டும்” என்று பேசினார்.

“நான் யாருடைய ரசிகனாக இருந்தேனோ அவரே என்னை அப்படிப் பாராட்டியபோது  நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்னுடைய   வாழ்க்கையில் பல முக்கியமான திருப்பங்களுக்குக் காரணமானவர் கலைவாணர்தான். நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த நான்   திரைப்படங்களில்  நடிக்கவும் அவர்தான்  காரணமாக அமைந்தார்.  கலைவாணரது கடைசி மாணவன் நான்தான்”  என்று  ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ராஜகோபால், கலைவாணரைப் பற்றி பல அரிய தகவல்களை அந்தக் கட்டுரையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“கலைவாணர் ஒரு அபூர்வப் பிறவி. அவரோடு சேர்ந்து நாடகங்களில் நடித்த போதும்,  சினிமாவில் நடித்தபோதும் எத்தனையோ இனிய அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன.

நாடகம் முடிந்து நாங்கள் வீடு திரும்பும்போது நாடகம் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் தந்த சம்பளம் போக கலைவாணருடைய  சம்பளப்  பணம் என்னிடம்தான்  இருக்கும். அந்த சமயத்தில் அவரிடம் உதவி கேட்டு வருபவர்கள் எல்லோருக்கும் அவர் அந்தப் பணத்திலிருந்து எடுத்துக் கொடுக்கச் சொல்வார். பெரும்பாலான நாட்கள்  வீடு திரும்பும்போது  அவருடைய சம்பளப்  பணம் முழுமையாக தீர்ந்து வெறும் கையுடன்தான் நாங்கள் வீடு திரும்புவோம். தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று எப்போதும் சொல்லாத வள்ளல் அவர்.  

1954-ம் ஆண்டில் தந்தை பெரியார் புத்த மத மாநாடு ஒன்றை நடத்தினார். அந்த மாநாட்டில் புத்தரைப் பற்றி கலைவாணர் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன்.

அந்த நிகழ்ச்சியின் முடிவில் பேசிய தந்தை  பெரியார் “எல்லோரும் என்னை பெரியார் என்று சொல்கிறீர்கள். ஆனால்  எனக்கும் மேலே  ஒரு பெரியார் இருக்கிறார். அது உங்களுக்குத்  தெரியுமா?” என்று அந்த கூட்டத்தில் இருந்தவர்களைப் பார்த்து கேட்டார்.  

பெரியார் அப்படி கேட்டதும் கூட்டத்தில் மிகப் பெரிய சலசலப்பு ஏற்பட்டது. “பெரியாருக்கு மேலே ஒரு பெரியாரா? யார் அவர்?” என்று அந்தக் கூட்டத்திலிருந்த எல்லோரும் ஒருவரோடு ஒருவர் கிசுகிசுக்கத்  தொடங்கியபோது தன்னுடைய பேச்சுக்கான விளக்கத்தை தந்தை பெரியாரே சொல்லத் தொடங்கினார்.

“உங்களுக்கு எல்லாம்  நான்  பெரியார். எனக்குப் பெரியார் கலைவாணர்தான். ஏனென்றால் நான் மேடை ஏறி சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களைச்  சொன்னால்  கல்லால் அடிக்கிறார்கள். நான் பேசுகின்ற அதே கருத்துக்களைத்தான் கலைவாணர் சினிமாவில் சொல்கிறார். ஆனால் அதைப் பார்க்கவும், கேட்கவும் காசு கொடுத்து போகிறார்கள். இப்போது சொல்லுங்கள். நான் சொன்னது நியாயம்தானே. அவர்தானே எனக்குப் பெரியார்” என்று தந்தை பெரியார் சொல்லி முடித்தபோது மக்களுடைய ஆரவாரம் அடங்க வெகு நேரம் ஆயிற்று.

கொடைத் தன்மை மட்டுமின்றி பல நல்ல குணங்களுக்கு சொந்தக்காரராக இருந்தவர் கலைவாணர். அதனால்தான் கட்சி வேறுபாடு இன்றி எல்லா அரசியல் தலைவர்களாலும் விரும்பப்பட்ட  கலைஞராக  அவர் இருந்தார்.

திறமைசாலிகளைத் தேடிப் பிடித்து அவர்களுக்கான  வாய்ப்புகளை பெற்றுத் தருவதில்  கலைவாணருக்கு நிகராக  யாரையும் சொல்ல முடியாது. 

காத்தவராயன் கதையை ‘ஆர்யமாலா’ என்ற பெயரில் திரைப்படமாக   எடுக்க திட்டமிட்ட  பட்சிராஜா ஸ்டுடியோ அதிபர்   ஸ்ரீராமுலு நாயுடு கலைவாணரைச்  சந்தித்து ‘ஆர்யமாலா’ கதையைச்  சொல்லிவிட்டு அந்தப் படத்தில் யாரை நடிக்க வைத்தால் சரியாக இருக்கும்  என்று அவரிடம் யோசனை கேட்டார். “படம் சக்சஸ் ஆகணும்னா கதாநாயகனாக பி.யு.சின்னப்பாவையும், வில்லனாக   பாலையாவையும் போடு” என்று கலைவாணர் சொன்னபோது ஸ்ரீராமுலு நாயுடு அடைந்த  அதிர்ச்சிக்கு அளவேயில்லை.

ஏனென்றால் அந்த கால கட்டத்தில் பி.யு.சின்னப்பா திரைப்பட மார்க்கெட்டை முற்றிலுமாக  இழந்துவிட்டு  ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்கப் போய்விட்டிருந்தார். டி.எஸ்.பாலையா அதற்கும் மேலே ஒரு படி சென்று சாமியாராக மாறிவிட்டிருந்தார். அவர் எங்கேயிருக்கிறார் என்பதைப் பற்றி அவரது குடும்பத்துக்கே அப்போது தெரியாமல் இருந்தது. ஆகவே, கலைவாணர் அவர்கள் இருவரது பெயரையும் சொன்னவுடன் ஸ்ரீராமுலு நாயுடு மிகப் பெரிய குழப்பத்துக்கு ஆளானார்.

ஸ்ரீராமுலுவின் முகத்தைப் பார்த்தே தான் சொன்ன யோசனையைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட கலைவாணர் “நீங்க எதையும் யோசிக்காதீங்க. நான் சொல்றதை கேளுங்க. இந்த படத்தில அவங்க ரெண்டு பெரும் நடிச்சாதான் நல்லா இருக்கும். நீங்க சரின்னு சொன்னா அவங்க எங்கே இருந்தாலும் அவங்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது என் பொறுப்பு. என்ன சொல்றீங்க?” என்று ஸ்ரீராமுலு நாயுடுவிடம் கேட்டார். ஸ்ரீராமுலு நாயுடு, கலைவாணர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர். ஆகவே   அவர் சொன்னதை மறுத்துப் பேச முடியாமல் “சரி” என்று ஏற்றுக் கொண்டார்.

ஸ்ரீராமுலு நாயுடு ஒப்புக் கொண்டவுடன் பி.யு.சின்னப்பாவையும், பாலையாவையும் தேடிப் பிடித்து அழைத்து வந்து ‘ஆர்யமாலா’ படத்தில் அவர்கள் இருவரையும் நடிக்க வைத்தார் கலைவாணர். மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த அந்த  படத்திற்குப் பிறகு அவர்கள் இருவரின் மார்க்கெட்டும் மீண்டும் சூடு பிடித்தது.

ஒரு முறை சிவாஜிக்கும், கண்ணதாசனுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பத்திரிகைகளில் அறிக்கை விடத் தொடங்கியபோது  கலைவாணர் அவர்களை சமாதானப்படுத்தியது மட்டுமின்றி இனி ஒற்றுமையாக இருப்போம் என்று தனக்கு முன்னால் அவர்களை  சத்தியம் செய்ய வைத்தார். அவரது பெருமைகளை எடுத்துச் சொல்ல  ஆரம்பித்தால் அதற்கு நாட்கள் போதாது” என்று கலைவாணரது பெருமைகளை எடுத்துச் சொல்லியுள்ள ‘குலதெய்வம்’  ராஜகோபால்  “நடிகனாக இருந்த என்னை வில்லுப்பாட்டுக் கலைஞராக ஆக்கியவரும் அவர்தான்” என்று கூறியுள்ளார்.

1957-ம் ஆண்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் கலைவாணர் உயிர் பிரிந்தது.1958-ம் ஆண்டு அவரது இல்லத்தில் கலைவாணரின் வாழ்க்கை வரலாற்றை வில்லுப் பாட்டு நிகழ்ச்சியாக முதன்முதலில் நடத்திய ‘குலதெய்வம்’  ராஜகோபால் அதற்குப் பிறகு எண்ணற்ற மேடைகளில் கலைவாணரைப் பற்றி வில்லுப் பாட்டு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்.

“என் வாழ்க்கையில் எல்லாமுமாக இருந்த அவருக்கு அவர் வாழ்ந்த காலத்தில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த வருத்தத்தில் இருந்த என்னுடைய மனதிற்கு அவர் இறந்த பிறகு வில்லுப் பாட்டு நிகழ்ச்சியின் மூலம் அவரது வாழ்க்கையைச் சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது என்று ‘குலதெய்வம்’ ராஜகோபால் குறிப்பிட்டிருக்கிறார்.

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News