நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருந்த படம் கல்கி 2898 ஏடி. கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூல் செய்து சாதனை படைத்தது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான முன்னோட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 2வது பாகத்தில் தீபிகா படுகோனே இடம்பெற மாட்டார் என தயாரிப்பு நிறுவனம் விஜயாந்தி மூவிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், “கல்கி 2898 ஏடி படத்தின் அடுத்த பாகத்தில் தீபிகா படுகோனே நடிக்க மாட்டார் என்பதை அறிவிக்கிறோம். கவனமாக பரிசீலித்த பிறகு, தீபிகாவும் எங்கள் படக்குழுவும் தனித்தனி பாதையில் செல்ல முடிவு செய்துள்ளோம். முதல் பாகத்தை உருவாக்கிய நீண்ட பயணத்தின் பின்னரும், எங்களிடையே புதிய கூட்டணி உருவாகவில்லை. கல்கி போன்ற படம், மிகுந்த அர்ப்பணிப்பையும் அதிகமான ஆற்றலையும் தேவைப்படுத்துகிறது. தீபிகாவின் எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் சிறந்த வெற்றி கிடைக்கட்டும்” என்று தெரிவித்துள்ளனர்.