வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த ‘மாநாடு’ திரைப்படம் 2021 நவம்பர் 25-ம் தேதி வெளியானது. படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் தளத்தில் படத்தின் வெற்றிப் பயணத்தை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.
கொரோனா காலத்தில் திரையரங்குகளுக்கு வருவதற்கே மக்கள் தயங்கிய சூழலில் வெளியான ‘மாநாடு’, எதிர்பார்ப்புகளைத் தாண்டி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இயல்பான சூழலில் படம் வெளியாகியிருந்தால் வசூல் இன்னும் பல மடங்கு அதிகரித்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இப்படம் தனக்குப் பெற்றுத் தந்த மரியாதையையே தனது மிகப்பெரிய சொத்தாகக் கருதுவதாகவும், திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்ததாகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த சிலம்பரசன், இயக்குநர் வெங்கட் பிரபு, எஸ்.ஜே. சூர்யா, யுவன் ஷங்கர் ராஜா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக, படத்தை வெற்றியடையச் செய்த சிம்பு ரசிகர்களுக்கும் திரையரங்குகளில் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும் நன்றி கூறியுள்ள அவர், இனியும் தரமான திரைப்படங்களை வழங்குவதே தனது நோக்கம் எனப் பதிவிட்டுள்ளார்.
