‘ஐ ஆம் கேம்’ தோல்வி குறித்து மனம் திறந்த துல்கர் சல்மான்!

ஒரு திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததற்காக அதில் பணியாற்றியவர்களை மட்டும் குறை கூறுவது சரியல்ல என நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். ‘ஐ ஆம் கேம்’ படத்தின் தோல்வி குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், எக்ஸ் தளத்தில் அதற்கு பதிலளித்த துல்கர், திரைப்பட உருவாக்கத்தின் பின்னணியில் இருக்கும் பல்வேறு காரணிகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஒரு படத்தில் நம்முடைய தரப்பில் அனைத்தையும் சரியாக செய்திருந்தாலும், எதிர்பாராத வெளிப்புற காரணிகள் முடிவையே மாற்றிவிடலாம். ஒரு திரைப்படத்தை உருவாக்க 200 முதல் 300 பேர் வரை ஒன்றாக பணியாற்றுகிறார்கள். இது எளிதான விஷயம் அல்ல. திரைப்படத்தின் வெற்றிக்கு அல்லது தோல்விக்கு எளிய சூத்திரத்தை உருவாக்க முடியாது” என அவர் கூறியுள்ளார்.

மேலும், எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும் அல்லது நடிகரும் வேண்டுமென்றே மோசமான திரைப்படத்தை உருவாக்குவதில்லை என்றும், நிஜ வாழ்க்கையில் நாம் நினைப்பது அனைத்தும் திட்டமிட்டபடி நடக்காததைப் போலவே சினிமாவிலும் பல விஷயங்கள் மாறக்கூடும் என்றும் துல்கர் தெரிவித்துள்ளார். தனது படக்குழுவினருக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன் என்றும், யாரையாவது குறை சொல்ல வேண்டும் என்றால் தன்னையே குறை சொல்லலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘சீதா ராமம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு துல்கர் நடித்த ‘கிங் ஆஃப் கொத்தா’, ‘ஐ ஆம் கேம்’ ஆகிய மலையாளப் படங்களும், தமிழில் வெளியான ‘காந்தா’ படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதேநேரம், 2024-ம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான ‘லக்கி பாஸ்கர்’ ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading