காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘சேகர் டோனைட்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் சஞ்சய் தத், தான் நடித்த ‘முன்னா பாய்’ கதாபாத்திரத்தைப் போலவே நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். இந்தப் படம் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தன்னை பிரதமராக கற்பனை செய்து கொண்ட சஞ்சய் தத், ‘முன்னா பாய்’ பாணியில் சுமார் ஐந்து நிமிடங்கள் மக்களிடம் பேசினார். இந்தியர்கள் அன்பும் விருந்தோம்பலும் கொண்டவர்கள் என்றும், நாட்டில் மீண்டும் அமைதியான சூழல் நிலவ வேண்டும் என்றும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார். காந்திஜியின் மூன்று குரங்குகளை குறிப்பிட்ட அவர், இன்றைய சூழலுக்கு தவறு நடக்கும்போது அதை சரி செய்யும் நான்காவது குரங்கும் தேவை எனக் கூறினார்.
அவரது பேச்சில் இடம்பெற்ற சில கருத்துகள், “இந்தியாவில் இனி அமைதியை உணர முடியாது” என்ற வகையில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து தனது கருத்து குறித்து சஞ்சய் தத் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
தனது பேச்சு எந்தவொரு தனிநபர், சமூகம் அல்லது நிறுவனத்தின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தில் கூறப்படவில்லை என்றும், அந்த உரையாடல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நகைச்சுவையாக வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ‘முன்னா பாய்’ படங்களில் இடம்பெறும் நகைச்சுவை மற்றும் நையாண்டி பாணியிலேயே தனது கருத்துகள் அமைந்திருந்ததாக கூறியுள்ள அவர், அன்பு, அரவணைப்பு, ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தை வலியுறுத்தும் ‘காந்திகிரி’ கருத்தை வெளிப்படுத்துவதே தனது நோக்கம் என்றும், ஆனால் தனது வார்த்தைகள் அந்த நோக்கத்தில் இருந்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
