கடந்த 1990-ம் ஆண்டு நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் நரி நரி நடுமா முராரி. இது அவரது திரை வாழ்க்கையில் மறக்கமுடியாத முக்கியமான படங்களில் ஒன்றாக அமைந்தது. தற்போது, எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் ஷர்வானந்தின் 37வது படத்திற்கு அதே பெயரான நரி நரி நடுமா முராரி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அனில் சுங்கராவின் ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் ராமபிரம்மம் சுங்கரா தயாரிக்கும் இந்தப் படத்தை சமாஜவரகமனா புகழ் ராம் அப்பாராஜு இயக்குகிறார். இதில் சம்யுக்தா மேனன் மற்றும் சாக்சி வைத்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இந்தப் படம் வரும் ஜனவரி 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முழு படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
