மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மக்கள் காவலன்’. சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் வாகை சந்திரசேகர், ஏ.வெங்கடேஷ், ஆர்.கே.விஜய் முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரதீபன் செல்வரத்னம் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். பிர்லா ஸ்டூடியோஸ் மற்றும் நீலம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் வரும் டிசம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணியத்துடன் வாழ விரும்பும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில், ஊழல் நிறைந்த அமைப்பு ஏற்படுத்தும் நெருக்கடிகளே படத்தின் மையமாக அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. எதிர்த்து நிற்பதா அல்லது சூழ்நிலைக்கு அடிபணிவதா என்ற கட்டாயத்திற்குள் சிக்கிக்கொள்ளும் அந்த மனிதனின் போராட்டம், பின்னர் மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி செல்கிறது. உலகம் விதிக்கும் எல்லைகளைத் தாண்டி கனவு காணும் துணிச்சலும், அந்த தடைகள் அர்த்தமற்றதாகும் வரை தொடர்ந்து முன்னேறும் மன உறுதியும் படத்தின் முக்கிய கருத்துகளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
—
