சூரி நடிப்பில் வெளியான ‘மண்டாடி’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக கூறப்படுகிறது. மதிமாறன் புகழேந்தி இயக்கிய இப்படம் ராமநாதபுரம் மீனவர்களின் வாழ்க்கை மற்றும் பாய்மரப்படகுப் போட்டியை மையமாக வைத்து உருவானது.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூரியின் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ள நிலையில், ‘மண்டாடி’ படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து சூரி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். கமல்ஹாசன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தனது சினிமா பயணத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் புதிய வெளிச்சத்தையும் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ‘மண்டாடி’ குறித்து கமல்ஹாசன் பகிர்ந்த கருத்து தனது வாழ்நாள் முழுவதும் வழிகாட்டும் ஆசீர்வாதமாக இருக்கும் என்றும் சூரி கூறியுள்ளார்.
