பாக்ஸர் அவதாரத்தில் கார்த்திகேயா.. ‘கம்பேக்’ படத்தின் புதிய அப்டேட்!

‘ஆர்.எக்ஸ் 100’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் கார்த்திகேயா, தற்போது தனது அடுத்த படத்தை தானே தயாரித்து இயக்கி நடிக்கிறார். ‘ஹிப்பி’, ‘குணா 369’, ‘90 எம்எல்’, ‘ராஜா விக்ரமார்க்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், அஜித்தின் ‘வலிமை’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சில கால இடைவெளிக்குப் பிறகு கார்த்திகேயா தொடங்கியுள்ள இந்தப் படத்துக்கு ‘கம்பேக்’ என பெயரிடப்பட்டுள்ளது. தனது சொந்த நிறுவனமான கார்த்திகேயா கிரியேட்டிவ் வொர்க்ஸ் மூலம் படத்தை தயாரிக்கும் அவர், இயக்குநராகவும் பொறுப்பேற்றுள்ளார். அவரது மனைவி லோஹிதா ரெட்டி தயாரிப்பில் இணைந்துள்ளார். இப்படத்தை 2027-ம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தின் கதைக்காக கார்த்திகேயா பாக்ஸராக நடிக்கிறார். அதற்காக திரையில் தோன்றுவதற்கு மட்டும் உடலை மாற்றாமல், கடந்த சில ஆண்டுகளாக முறையாக குத்துச்சண்டை பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது சொந்த தயாரிப்பில் மீண்டும் திரைக்கு வருவதால், அந்த ‘கம்பேக்’ உணர்வையே படத்தின் தலைப்பாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதிரடியான பாக்ஸர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் நீண்ட காலமாக அவர் மேற்கொண்டு வரும் பயிற்சி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply