சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் அண்ட் வார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கவுஷல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம் காதல் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. வெளியான போஸ்டரில் ரன்பீர் கபூர் பழைய காலத்து காரை ஓட்டியபடி வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். பின்னால் வாரிய தலைமுடி, பென்சில் மீசை மற்றும் வட்ட வடிவ கண்ணாடி என அவரது லுக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, இடது கையில் காயங்களுடன் ரத்தம் வழிவது போன்ற காட்சி படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
‘லவ் அண்ட் வார்’ மூலம் சஞ்சய் லீலா பன்சாலி – ரன்பீர் கபூர் கூட்டணி சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது. இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு வெளியான ‘சாவரியா’ படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினர். ஆலியா பட் ஏற்கனவே பன்சாலியின் ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்தில் நடித்துள்ள நிலையில், விக்கி கவுஷல் அவருடன் இணையும் முதல் படம் இதுவாகும்.
இந்த நிலையில், படத்தின் புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. ‘லவ் அண்ட் வார்’ அடுத்த ஆண்டு ஜனவரி 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக இப்படம் வெளியாகிறது.
