‘பத்ரி’ படத்தின் 2-ம் பாகத்தை இயக்க விரும்புகிறேன் -இயக்குனர் ஜேசன் சஞ்சய் டாக்!

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சுதீப் கிஷன் கதையின் நாயகனாக நடித்துள்ளார். எஸ். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜேசன் சஞ்சயிடம் விஜய் நடித்த படங்களில் எந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. ‘போக்கிரி 2’ அல்லது ‘சச்சின் 2’ போன்ற படங்களை இயக்குவீர்களா என கேட்கப்பட்டபோது, தான் ‘பத்ரி 2’ படத்தை இயக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். ‘பத்ரி’ படத்தில் ஒரு ‘சிக்மா’ உணர்வு இருப்பதாகவும் ஜேசன் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் விஜய்யின் பழைய படங்களில் தனக்கு பிடித்தமான ஒன்று குறித்து அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தனது சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட அவர், அப்பாவுடன் நிறைய படங்களை பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக ‘போக்கிரி’ திரைப்படம் எப்போதும் நினைவில் இருக்கும் என்றும், அந்த காலகட்டத்தில் ஒருபக்கம் விஜய் படமும் மறுபக்கம் அஜித் படமும் வெளியான சூழல் மிகவும் ஆர்வமாக இருந்ததாகவும் ஜேசன் சஞ்சய் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply