‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் இயக்குநர் ராம் சமீபத்திய பேட்டி ஒன்றில், படத்தின் மையக்கதையை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். குழந்தைகளுக்கு சொல்லப்படும் “ஏழு கடல் தாண்டி நாயகன் தனது காதலியை தேடிச் செல்கிறான்” என்ற கற்பனையை அடிப்படையாகக் கொண்டுதான் படத்தின் கதையை உருவாக்கியதாக ராம் தெரிவித்துள்ளார். இது பேண்டசி கலந்த காதல் கதையாக உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
படத்தின் முக்கிய கதாபாத்திரமான நிவின் பாலிக்கு பெயரே கிடையாது. 4,000 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் சாகாவரம் பெற்ற மனிதராக அவர் நடித்துள்ளார். பல நூற்றாண்டுகளாக ஒரு பெண்ணை தேடி வரும் அவருக்கு, அந்தப் பெண்ணை நிஜ வாழ்க்கையில் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், ஒரு தீபாவளி இரவில் ரயிலின் முன்பதிவு செய்யப்படாத கடைசி பெட்டியில் தூங்கும்போது, அவரது கனவில் அந்தப் பெண் தோன்றுகிறார்.
அதே ரயில் பெட்டியில் சூரியின் கதாபாத்திரமும் வந்து சேர்கிறது. அவருக்கும் படத்தில் பெயர் கிடையாது. தனது குடும்பத்திற்காக எட்டு ஆண்டுகள் பாலைவனத்தில் உழைத்து பொருளீட்டிய அவர், இரண்டு சூட்கேஸ்கள் நிறைய பொருட்களையும் மகிழ்ச்சியையும் எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்புகிறார். ரயில் பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்கும் நிவின் பாலியின் கதாபாத்திரத்தை சூரி எழுப்பியதும் கதை வேறு திசைக்கு செல்கிறது. அந்த நேரத்தில்தான் நிவின் பாலி தனது கனவில் பல ஆண்டுகளாக தேடி வந்த பெண்ணை கண்டிருக்கிறார். இருவருக்கும் இடையே உருவாகும் பயணமும், அவர்களின் மாறுபட்ட உரையாடல்களுமே கதையின் முக்கிய பகுதியாக இருக்கின்றன.
இந்த இருவருக்கும் இடையே ரயில் பெட்டியில் இருக்கும் ஒரு எலியும் முக்கிய பங்கு வகிக்கிறது. அது ஒரு கட்டத்தில் இருவரையும் பிரிக்கிறது மற்றொரு சூழலில் அவர்களை இணைக்கிறது. நிவின் பாலி தனது காதலியை கண்டுபிடித்தாரா, சூரி பாதுகாப்பாக தனது வீட்டை சென்றடைந்தாரா, இவர்களுக்கு இடையில் சிக்கிக்கொண்ட அந்த எலியின் நிலை என்ன என்பதுதான் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் கதையை நகர்த்துவதாக ராம் தெரிவித்துள்ளார்.
