Advertisement

‘பாரிஸ் கபே’ திரைப்படம் எப்படி இருக்கு?– திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒரு வழியாக வேலை கிடைக்கிறது. அந்த மகிழ்ச்சியை சொந்த ஊரில் இருக்கும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கும் அவர், அம்மா அனுமோலைக்கு போன் செய்கிறார். ஆனால், அந்த உரையாடலின் போது பெற்றோர் இருவரும் பிரிந்து வாழ்வதை அறிந்து அதிர்ச்சியடைகிறார்.

பெற்றோரின் பிரிவுக்கான காரணத்தை தெரிந்து கொள்ளும் நோக்கிலும், இருவரையும் மீண்டும் இணைத்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் காதலன் விஜய் விஸ்வாவுடன் அர்ச்சனா சொந்த ஊருக்குத் திரும்புகிறார். அங்கு தந்தை டாக்டர் குரு சோமசுந்தரத்தை சந்தித்து, அம்மாவை விட்டு பிரிந்ததற்கான காரணத்தை கேட்கிறார். அவர் கூறும் தகவல், அர்ச்சனா எதிர்பாராத புதிய திருப்பத்தை சந்திக்க வைக்கிறது.

ஒருபுறம் பெற்றோரின் பிரிவுக்குப் பின்னால் இருக்கும் உண்மையை தேடும் அர்ச்சனா, மறுபுறம் அவர்களை மீண்டும் ஒன்றிணைக்க தொடர்ந்து முயற்சி செய்கிறார். அவரது முயற்சி என்ன முடிவை சந்திக்கிறது? பிரிந்த பெற்றோர் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

குரு சோமசுந்தரம் டாக்டர் கதாபாத்திரத்தில், தொழில் சார்ந்த அழுத்தங்களுக்கு பணிந்து செல்வதா அல்லது எதிர்த்து நிற்பதா என்ற குழப்பத்தை இயல்பான நடிப்பில் வெளிப்படுத்துகிறார். அநியாயத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் மனைவி கதாபாத்திரத்தில் அனுமோல் தனது நடிப்பால் கதைக்கு அழுத்தம் சேர்க்கிறார்.

அர்ச்சனாவாக வரும் நடிகை, பெற்றோரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் போராடும் காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளார். அவரது காதலனாக நடித்துள்ள விஜய் விஸ்வா கதாபாத்திரத்திற்குத் தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளார். சாய் விக்கி, நயனா சாய், பிபின் குமார் ஆகியோரின் நடிப்பும் படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

கே-வின் இசை குடும்ப உணர்வுகளுக்கும் திரில்லர் காட்சிகளுக்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளது. சதீஷ் ஜி-யின் ஒளிப்பதிவு கதையின் மனநிலையை பிரதிபலிக்கும் காட்சிகளை அழகாக பதிவு செய்துள்ளது. குடும்ப உறவுகளின் உணர்வுகளை மையமாக வைத்து, அதனுடன் திரில்லர் அம்சங்களையும் இணைத்து சொல்ல முயற்சிக்கும் படமாக ‘பாரிஸ் கபே’ அமைந்துள்ளது.

Add a Comment

Leave a Reply