என்ன விலை? திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறை காசுகளை நீருக்கடியில் தேடி எடுத்து அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்துகிறார் கருணாஸ். அப்படி ஒரு நாளில் வழக்கம்போல் கடலுக்குள் இறங்கி காசுகளை சேகரித்துக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக விலை உயர்ந்த ஆபரணம் ஒன்று அவரது கையில் சிக்குகிறது. அதை தனக்கென வைத்துக்கொள்ளாமல் போலீசாரிடம் நேர்மையாக ஒப்படைக்கும் அவருக்கு, அதன்பிறகு தொடங்குகிறது எதிர்பாராத பிரச்சினை.

தான் செய்யாத குற்றத்திற்காக சிக்கிக்கொள்ளும் ஒரு சாதாரண மனிதன் சந்திக்கும் வலி, அவமானம் மற்றும் போராட்டத்தை மையமாக வைத்து கதை நகர்கிறது. கிடைத்த பொருளை நேர்மையாக ஒப்படைத்த ஒருவரின் வாழ்க்கையே கேள்விக்குறியாகும் சூழலில், குற்றமற்ற மனிதனின் மானத்திற்கும் உண்மைக்கும் என்ன விலை என்ற கேள்வியை இயக்குநர் சஞ்சீவ் பழூர் முன்வைத்துள்ளார். இதை வெறும் வசனங்களின் மூலம் சொல்லாமல், கதாபாத்திரங்களின் வாழ்க்கை மற்றும் உணர்வுகளுக்குள் கொண்டு சென்று பதிவு செய்துள்ளார்.

குடும்பத்துடன் அமைதியாக வாழும் மனிதராக இருந்து, எந்தத் தவறும் செய்யாமல் குற்றவாளி போல் நிற்கும் நிலைக்கு தள்ளப்படும் கதாபாத்திரத்தை கருணாஸ் தனது உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பின் மூலம் வலிமையாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது நடிப்பில் இதுவரை பார்க்காத மற்றொரு பரிமாணம் தெரிகிறது. குறிப்பாக அந்த கதாபாத்திரத்தின் வலியும் மனநிலையும் வெளிப்படும் காட்சிகள் கவனத்தை ஈர்க்கின்றன.

வழக்கறிஞர் காஞ்சனா கதாபாத்திரத்தில் வரும் நிமிஷா சஜயனும் படத்தின் முக்கிய பலமாக உள்ளார். கருணாஸுக்காக நீதிமன்றத்தில் வாதிடும் காட்சிகளில் அவரது நடிப்பு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. விஜயலட்சுமி வீரமணி, ஒய்.ஜி.மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், கமலேஷ் ஜெகன், லொள்ளு சபா மற்றும் சுவாமிநாதன் ஆகியோரின் பங்களிப்பும் கதைக்கு வலு சேர்க்கிறது.

ராமேஸ்வரம் கடலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கதையின் முக்கிய அங்கமாக இருப்பதால், கடல் சார்ந்த காட்சிகளுக்கு ஆல்பா ஆண்டனியின் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது. கதையின் உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கு சாம் சி.எஸ். இசை கூடுதல் தாக்கத்தை கொடுக்கிறது. சாதாரண மனிதனின் நேர்மை, உண்மை மற்றும் அதற்காக அவன் கொடுக்கும் விலை குறித்து பேசும் யதார்த்தமான படைப்பாக இப்படம் அமைந்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading