முதலமைச்சர் பைஜூ சந்தோஷ் பதவியேற்கும் முன்பே, அவர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் வைத்து திலீப் சாமர்த்தியமாக அவரை கடத்துகிறார். சரண்யா பொன்வண்ணன் உதவியுடன் தமிழக–கேரள எல்லைக்குள் யாருக்கும் தெரியாமல் அவரை அடைத்து வைக்கிறார். முதலமைச்சரின் மகனான வினித் சீனிவாசன், தனது தந்தையை மீட்க போலீஸ் அதிகாரி சாண்டியின் உதவியுடன் களத்தில் இறங்குகிறார். ஆனால் ஒரு கட்டத்தில் சாண்டியும் திலீப்பின் ஆள் என்பதும் தெரிய வருகிறது. திலீப் எதற்காக முதலமைச்சரை கடத்தினார், வினித் சீனிவாசன் தந்தையை காப்பாற்றினாரா என்பதே மீதிக் கதை.

திலீப்பின் நடிப்பும் வசனங்களும் வழக்கம்போல் ரசிகர்களை கைதட்ட வைக்கின்றன. இருப்பினும் அவரது கதாபாத்திரம் அழுத்தமாக உருவாக்கப்படவில்லை. காரணம் கதைக்களம் பல இடங்களில் பலவீனமாக இருப்பதுதான். முதலமைச்சரை எளிதாக கடத்துவது, அவரை மறைத்து வைப்பது, அதற்கான காரணம் ஆகியவை பெரிதாக நம்பிக்கை அளிப்பதில்லை. இருந்தாலும் திலீப் தனது பங்கிற்கு நடிப்பு, பாடல், சண்டை காட்சிகளில் அசத்துகிறார்.
கில்லி பாலா என்ற கதாபாத்திரத்தில் தீவிர விஜய் ரசிகராக மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதிக நேரம் எடுத்துக் கொண்டு சில காட்சிகளிலும் ஒரு பாடல் காட்சியிலும் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்துகிறார். குறிப்பாக அவரது இளமை தோற்றம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறது. திலீப்பும் மோகன்லாலும் இணைந்து ஆடும் ‘நாட்டு நாட்டு’ ஸ்டைல் நடனக் காட்சி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
லோகா படத்தின் மூலம் போலீஸ் அதிகாரியாக கவனம் பெற்ற சாண்டி, மலையாளத்தில் நடிக்கும் முதல் படமிது. இதில் மீண்டும் போலீஸ் அதிகாரி வேடமே என்றாலும், அவருக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் குறிப்பிடத்தக்க நடிகராக அவர் உருவெடுப்பார் என்பது உறுதி.
யாரும் எதிர்பாராத வகையில் கிளைமாக்ஸில் எஸ்.ஜே.சூர்யா சஸ்பென்சாக என்ட்ரி கொடுக்கிறார். மலையாளத்தில் அவரது முதல் படமிது. மார்க் ஆண்டனி பாணியில் திலீப், மோகன்லால் உடன் அவர் பேசும் கிளைமாக்ஸ் காட்சி காமெடி அலப்பறையாக அமைந்து இரண்டாம் பாகத்திற்கான சுட்டிக்காட்டாகவும் இருக்கிறது. ஷான் ரகுமான் பாடல்களால் உற்சாகத்தை ஏற்படுத்த, கோபி சுந்தர் பின்னணி இசையில் விறுவிறுப்பை கூட்டியுள்ளார். ஒளிப்பதிவாளர் ஆர்மோ, சேசிங் காட்சிகளிலும் கேரளாவின் இயற்கை அழகையும் சிறப்பாக பதிவு செய்துள்ளார்
