கிளிக்பைட் கலாசாரத்தை கடுமையாக சாடிய அமிதாப் பச்சன்!

இந்திய சினிமாவின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன், சமூக வலைதளங்களின் வருகைக்கு முன்பிருந்தே தனது தனிப்பட்ட வலைப்பதிவில் தொடர்ந்து எழுதி வருகிறார். 16 ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் நள்ளிரவில் வெளியாகும் அவரது பதிவுகளில் வாழ்க்கை அனுபவங்கள், சிந்தனைகள் மற்றும் திரையுலகப் பயணம் குறித்த பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார்.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளுடன் தொடங்கிய சமீபத்திய பதிவில், செய்தியை முதலில் வெளியிட வேண்டும் என்ற ஊடகங்களின் போட்டி மனநிலையை அமிதாப் பச்சன் கடுமையாக விமர்சித்துள்ளார். தனது வலைப்பதிவில் இடம்பெறும் கருத்துகளுக்கு விசித்திரமான விளக்கங்கள் கொடுக்கப்படுவதும், அவற்றைத் திரித்து வெளியிடுவதும் சிரிப்பைத் தாண்டிய விஷயமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற ஊடகங்களை முந்தி செய்தியை வெளியிட்டு கவனம் பெற வேண்டும் என்ற அவசரத்தில், உண்மையான தகவல்களுக்கு முக்கியத்துவம் குறைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மொழியின் சரியான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் செய்திகளை அணுகுவது வேடிக்கையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நடக்காத ஒரு சம்பவத்தைக் கூட நடந்தது போல் காட்டுவதற்காக மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகளையும் தவறான தகவல்களையும் பயன்படுத்துவது வணிக ரீதியாக பலன் தரலாம். ஆனால், அது உண்மைக்கு செய்யப்படும் அநீதி என்று கூறியுள்ள அமிதாப், பணம் கொடுத்து உருவாக்கப்படும் உள்ளடக்கம் தனது முதலீட்டை திரும்பப் பெற வேண்டும் என்பது வணிகத்தின் இயல்பு தான் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஊடகங்களில் அதிகரித்து வரும் ‘கிளிக்பைட்’ போக்கை அவர் காட்டமாக சாடியுள்ளார்.

—

Add a Comment

Leave a Reply