தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பியும் நடிகருமான ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜெய் ஜெய் கணேசா’. இப்படத்தில் நயன் சாரிகா, பிரகதி ஸ்ரீவத்சவா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ராஜ் அருண் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆக்ஷன், த்ரில்லர், நகைச்சுவை எனப் பல பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. உதய் பொம்மிசெட்டி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஆதித்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். சேத்தன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார். பாடல்களை சுவிஸ் தமிழ்மகள், பாமகன், ஜோ பைந்தமிழ் ஆகியோர் எழுதியுள்ளனர்.
விஜய் மாதவன் தயாரித்துள்ள இப்படத்தைத் தற்போது தமிழில் ‘ஜெய் ஜெய் கணேசா’ என்ற பெயரில் வெளியிடத் தயாராகி வருகின்றனர். படத்தின் தமிழ் உருவாக்கப் பணிகளை ஏ.ஆர்.கே. ராஜராஜா மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் ஆனந்த் தேவரகொண்டா முதன்முறையாகத் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகவுள்ளார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
