பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய சில கருத்துகள் சமீபத்தில் அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தின. தமிழக முதல்வர் விஜயை அவர் மறைமுகமாக விமர்சித்ததாக சிலர் கருத்து தெரிவித்த நிலையில், இதுதொடர்பாக விஜய் டிவி தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்திற்கு மத்தியில், விஜய் சேதுபதியை ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் சீனு ராமசாமி அவருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் விஜய் சேதுபதியை தனக்கு நீண்ட காலமாக தெரியும் என்றும், மனதில் நினைப்பதை நேரடியாக வெளிப்படுத்தக்கூடியவர் என்றும் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். மறைமுகமாக யாரையும் தாக்கும் குணம் அவருக்கு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ள அவர், தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் அதிக அளவில் பார்ப்பதாகவும், சட்டசபை நடைபெறும் காலகட்டங்களில் ஓடிடி, சினிமா மற்றும் இணையதள செயல்பாடுகள் மந்தமடைவது உண்மை என்றும் கூறியுள்ளார்.
பிக்பாஸ் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு அரசியல் சாயல் கொடுத்தால் மக்கள் கவனம் அதிகரிக்கும் என நிகழ்ச்சியை நடத்துபவர்கள் நினைத்திருக்கலாம் என்றும், அப்படியொரு நிகழ்ச்சியில் பேசப்பட்ட ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதை தீவிரமான விவகாரமாக பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த கருத்தை வைத்து விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது வருத்தமளிப்பதாகவும் சீனு ராமசாமி கூறியுள்ளார்.
தொடர்ந்து விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா முழுவதும் அறியப்படும் கலைஞராக வளர்ந்துள்ள சேது, புதியவர்களை ஊக்கப்படுத்துவதற்காக பல படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாகவும், தனக்கு பிடித்த முன்னணி நடிகர்களின் படங்களில் தனது இமேஜைப் பற்றி கவலைப்படாமல் வில்லன் கதாபாத்திரங்களையும் ஏற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பல அறிமுக இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியதோடு, 100 மூத்த திரைத்துறை கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் என 100 சவரன் தங்கம் வழங்கியதாகவும், சிக்கலில் இருந்த பல திரைப்படங்களுக்கு தனது சம்பளத்தை விட்டுக்கொடுத்து உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்பின் அறிமுகம் இல்லாத பலருக்கும் உதவி செய்தவர் விஜய் சேதுபதி என்பதால், அவரை அவசரப்பட்டு தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
