வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் முன்னோட்ட வீடியோவை தீபாவளியன்று வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். வெற்றிமாறனின் குரல் பதிவுடன் சிலம்பரசன், ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன் உள்ளிட்ட நடிகர்கள் இடம்பெறும் சுமார் 8 நிமிட வீடியோவாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கான டப்பிங் மற்றும் எடிட்டிங் பணிகளும் நிறைவடைந்திருந்தன. சுமார் 100 திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருந்த நிலையில், தொழில்நுட்பப் பணிகள் முடிவடையாததால் வீடியோ வெளியீடு தள்ளிப்போனதாகக் கூறப்படுகிறது.
அனிருத் பின்னணி இசையமைத்த பிறகே வீடியோவைத் தணிக்கைக்கு அனுப்ப முடியும். தணிக்கை ஒப்புதல் கிடைத்த பின்னர்தான் திரையரங்குகளுக்கு வீடியோவை வழங்க முடியும். தற்போது அனிருத் தனது திருமண ஏற்பாடுகளில் இருப்பதால், பின்னணி இசைப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. அனிருத்தின் திருமணம் முடிந்த பிறகு புதிய இசையுடன் வீடியோவை வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் உலாவருகின்றன. அதேசமயம் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகவுள்ள ‘ட்ரெயின்’ திரைப்படத்துடன் ‘The World of Arasan’ வீடியோவை இணைத்து, தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 1,000 திரையரங்குகளில் படக்குழு வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
