‘தினந்தோறும்’ படத்தை இயக்கிய நாகராஜ் தற்போது ‘ஆகாயம்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீராம் கார்த்திக், லிஷா மிராணி, ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயப்பிரகாஷ், கிரி துவாரகிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை டெல்டா டாக்கீஸ் சார்பில் ஜெயச்சந்திரன், கார்த்திகா தேவி தயாரித்துள்ளனர். கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்ய, ரகுநந்தன் இசையமைத்துள்ளார். ‘ஆகாயம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், அஜயன் பாலா, தயாரிப்பாளர் டி.சிவா உள்ளிட்ட திரையுலகினர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய இயக்குநர் நாகராஜ், வாழ்க்கையில் தவறான பாதைக்குச் சென்றுவிட்டு மீண்டும் திரும்ப நினைப்பவர்கள் பலர் இருப்பதாக தெரிவித்தார். படத்தில் இடம்பெறும் “குடி உள்ளே போனால் குடும்பம் வெளியே போயிடும்” என்ற வசனம், மதுவால் ஏற்படும் நோய், கடன், காவல் துறை பிரச்சினை உள்ளிட்ட பாதிப்புகளையும், அதன் காரணமாக குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களையும் எடுத்துக்காட்டுவதாக கூறினார்.
மது பழக்கத்திலிருந்து ஒருவர் மீண்டு வாழ்க்கையில் மீண்டும் முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கையை இப்படம் பேசும் என்றும், தன்னால் மீண்டும் வர முடிந்ததைப் போல மற்றவர்களாலும் முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் நாகராஜ் தெரிவித்தார். மதுவைப் பற்றிய கருத்துகள் படத்தில் பிரசாரமாக இல்லாமல் காதல் கதையுடன் இயல்பாக இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார். அரசியலும் கதையில் இடம்பெற்றாலும், ‘ஆகாயம்’ முக்கியமாக அன்பைப் பற்றிய படமாக இருக்கும். நடிகர் விஜய்யை அன்பு தான் முதல்வர் விஜய்யாக ஆக்கியது, அந்த அன்பின் வலிமையைத்தான் திரைப்படம் பேசுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
