மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா லட்சுமி, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளார். மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு வரவேற்பை பெற்றார். கடைசியாக விஷ்ணு விஷாலுடன் ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வெளியான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படமும் திரையரங்குகளில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமாக மாறியுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா லட்சுமி அணிந்திருந்த உடை குறித்து சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “ஒரு பெண்ணின் ஆடையிலோ அல்லது அவரது உடல் அமைப்பிலோ மட்டுமே பண்பாடு இருப்பதாக நான் நினைக்கவில்லை. மற்றவர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதில்தான் உண்மையான பண்பாடு இருக்கிறது. நாட்டின் ஜிடிபி வளர்ச்சி, கைவிடப்படும் பெற்றோர்கள் போன்ற முக்கியமான விஷயங்களைப் பற்றி இங்கு யாரும் பேசுவதில்லை. ஆனால், என்னுடைய ஆடையைப் பற்றி மட்டும் ஏன் இவ்வளவு தீவிரமாக விவாதிக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஆரம்பத்தில் தன்னைப் பற்றிய விமர்சனங்களை வெறும் சிரிப்புடன் கடந்து சென்றதாகவும், ஆனால் தனது உடையை குறித்து சமூகம் இவ்வளவு தீவிரமாக விவாதிப்பதை பார்த்தபோது அது தன்னை அதிர்ச்சியடையச் செய்ததாகவும் ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். ஒரு பெண்ணின் உடை குறித்து மட்டுமே இவ்வளவு கவனம் செலுத்தும் சமூகத்தின் போக்கு தன்னை ஆழமாக பாதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
