மலையாள திரையுலகில் நடிகர் நிவின் பாலி, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான முதல் படத்திலேயே நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். அதன் பின்னர் அவர் தொடர்ந்து நடித்த படங்கள் இளைஞர்களை பிரதிபலிக்கும் விதமாகவும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் வெளியாகி, தொடர் வெற்றிகளை பெற்றன.

ஆனால் சமீப காலமாக, குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் நிவின் பாலிக்கு குறிப்பிடத்தக்க வெற்றிப் படம் எதுவும் அமையவில்லை. இந்த நிலையில், அவரது நடிப்பில் பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் மகன் அகில் சத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்வம் மாயா’ திரைப்படம் நாளை (டிசம்பர் 25) வெளியாகிறது.
இந்த படத்தில், நீண்ட நாள்களுக்கு பிறகு நிவின் பாலியும் அவரது காமெடி கூட்டாளியான அஜூ வர்கீஸும் இணைந்து நடித்துள்ளதால், ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இதன் மூலம் நிவின் பாலி மீண்டும் காமெடி ஜானருக்கு திரும்பியுள்ளார் என ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பேசுகின்றனர்.
இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் நிவின் பாலி கூறுகையில், தொடர்ந்து நகைச்சுவை படங்களில் நடித்தால் ஒரு கட்டத்தில் மறக்கப்படலாம் என நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அறிவுரை கூறியதாகவும், அதனால் கனமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்றும், இனி ரசிகர்கள் விரும்பும் தன்னுடைய வழக்கமான பாணியில் உள்ள கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
