‘கே.ஜி.எப்’ படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக மாறியவர் பிரசாந்த் நீல். தற்போது ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ‘டிராகன்’ படத்தை தெலுங்கில் இயக்கி வரும் நிலையில், அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தன் நடகவுடா புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். ‘418’ என்ற படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்த ஹாரர் திரைப்படத்தை பிரசாந்த் நீல் வெளியிடுகிறார். படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த ஜூலை மாதமே திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தணிக்கை தொடர்பான பிரச்சினையால் ரிலீஸ் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.
‘418’ படத்தில் இடம்பெற்றுள்ள பேய் காட்சிகள் மற்றும் திகில் காட்சிகள் அதிகமாக இருப்பதாகக் கூறி, படத்திற்கு சான்றிதழ் வழங்க தணிக்கை குழு தயக்கம் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து படக்குழு தாமதிக்காமல் படத்தை ரிவைசிங் கமிட்டியின் பார்வைக்கு அனுப்பி வைத்து சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து தகவல் வெளியானதும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, ஹாரர் படத்திலேயே திகில் காட்சிகள் இருப்பதை காரணமாகக் கொண்டு சான்றிதழ் வழங்குவதில் பிரச்சினை எழுப்புவது நகைச்சுவையாக இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
—
