தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானவர் வையாபுரி. 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் தனது பயணத்தை தொடர்ந்துள்ளார். மேலும் ‘பிக் பாஸ்’ முதல் சீசனிலும் போட்டியாளராக பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் இன்ஸ்டாகிராமில் தனது கணக்கை தொடங்கிய வையாபுரி, தொடர்ந்து தனது திரையுலக அனுபவங்கள் மற்றும் பழைய நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார். அவர் சமூக வலைதளத்தில் இணைந்து ஒரு மாதமே ஆன நிலையில், தற்போது ஒரு லட்சம் பேர் அவரை பின்தொடரத் தொடங்கியுள்ளனர்.இதையடுத்து தன்னை ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு எப்படி ஏற்பட்டது என்பதையும் மனம் திறந்து பேசியுள்ளார். ஒரு புரொடக்ஷன் மேனேஜர் மூலம் இயக்குநர் ஒருவரை சந்திக்கச் சென்றபோது நடந்த சம்பவமே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
வையாபுரி பேசுகையில், அந்த இயக்குநர் தன்னை சந்திக்க விரும்பவில்லை என்றும், தன்னைப் பற்றிப் பேசும்போது ‘பழைய ஆர்ட்டிஸ்ட்’ என்று குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் இதற்கான காரணத்தை புரொடக்ஷன் மேனேஜரிடம் கேட்டபோது, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பல புதிய கலைஞர்கள் அறிமுகமாகி வருவதால், வையாபுரி போன்ற பழைய நடிகர்களை கவனத்தில் கொள்ளவில்லை என்ற தகவல் தனக்கு கிடைத்ததாக கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தன்னை மிகவும் பாதித்ததாக தெரிவித்த அவர், அதன் பிறகுதான் சமூக வலைதளங்களில் நாமும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததாக கூறியுள்ளார். புதிய தலைமுறை இயக்குநர்களிடம் தன்னைப் பற்றிய நினைவூட்டலாகவும், தன்னுடைய அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இன்ஸ்டாகிராமை தொடங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரே மாதத்தில் ஒரு லட்சம் பேர் தன்னை பின்தொடர்ந்திருப்பது, ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அன்பை புரிய வைத்துள்ளதாக கூறிய வையாபுரி, இந்த ஆதரவே தனக்கு போதும் என கண்கலங்கியபடி பேசியுள்ளார். அவருடைய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
