பாலிவுட்டில் தனது நடன அசைவுகளாலும், நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கியவர் நோரா பதேஹி. கனடாவில் பிறந்து வளர்ந்த இவர், இந்திய திரையுலகில் தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலமானார். குறிப்பாக ‘தில்பர்’, ‘ஓ சாகி சாகி’ உள்ளிட்ட பாடல்களில் இடம்பெற்ற நடனம் அவரை நாடு முழுவதும் பிரபலமடையச் செய்தது. திரைப்படங்கள் மட்டுமின்றி இசை நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வரும் நோரா பதேஹி, தற்போது தமிழ் சினிமாவிலும் தனது அடுத்தடுத்த படங்கள் மூலம் கவனம் செலுத்தி வருகிறார். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் அவர் குத்தாட்டம் ஆடியுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘காஞ்சனா 4’ திரைப்படத்திலும் நோரா பதேஹி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் அவர் பேய் வேடத்தில் தோன்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பாலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் தனது தடத்தை பதிக்க தயாராகி வருகிறார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நோரா பதேஹி, ரசிகர்களை கவர்வது குறித்த தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். தன்னை பார்க்கும் ரசிகர்களின் கவனம் சில நொடிகளாவது முழுமையாக தன் மீது இருக்க வேண்டும் என்பதே விருப்பம் என அவர் கூறியுள்ளார். திரையில் நடிப்பு மற்றும் நடனம் மூலம் ரசிகர்களை ஈர்ப்பது மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் அவர்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் நோரா தெரிவித்துள்ளார். ரசிகர்களின் இதயங்களை சென்றடைவதை தனது இலக்காகக் கொண்டு தொடர்ந்து பயணிக்க விரும்புவதாக அவர் பேசிய கருத்துகள் தற்போது கவனம் பெற்று வருகின்றன.
