‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன், தொடர்ந்து ‘மாஸ்டர்’, ‘தங்கலான்’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார். தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வரும் அவர், தற்போது ‘சர்தார் 2’, ‘பாக்கெட் நாவல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
‘சர்தார் 2’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாளவிகா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரசிகர்களுடன் கேள்வி – பதில் நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது ரசிகர் ஒருவர், தனக்கு மிகவும் பிடித்த மூன்று தமிழ் நடிகைகள் யார் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த மாளவிகா, ‘அமரன்’ படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு தனக்கு மிகவும் பிடித்ததாக கூறினார். அந்த திரைப்படத்தின் கதைக்கு அவரது நடிப்பு உயிரூட்டியதாகவும், படம் முழுவதும் அவர் சிறப்பாக நடித்திருந்ததாகவும் பாராட்டினார்.
அடுத்ததாக த்ரிஷா தனக்கு பிடித்த நடிகை எனக் குறிப்பிட்ட மாளவிகா, ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அவரது தோற்றமும் நடிப்பும் மிகவும் கவர்ந்ததாக தெரிவித்தார். மூன்றாவது இடத்தில் நித்யா மேனனை குறிப்பிட்ட அவர், பல மொழிகளை பேசும் திறமையும், வெவ்வேறு மொழிப் படங்களில் சிறப்பாக நடிக்கும் திறனும் அவரிடம் இருப்பதாக பாராட்டினார். குறிப்பாக ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நித்யா மேனன் ஏற்றிருந்த கதாபாத்திரம் தனக்கு மிகவும் பிடித்ததாகவும் மாளவிகா கூறியுள்ளார்.
