‘ஹைக்கூ’ திரைப்படம் எப்படி இருக்கு? -திரைவிமர்சனம்!

கல்லூரியில் மகளிர் கழிப்பறைக்குள் தவறுதலாக நுழைந்ததால் ஏகன் கல்லூரியிலிருந்து நீக்கப்படுகிறார். அவசரமாக வேறு கல்லூரியில் சேர முயற்சிக்கும் அவருக்கு, சமீபத்தில் ஆண்களும் படிக்க அனுமதி வழங்கப்பட்ட பெண்கள் கல்லூரியில் இடம் கிடைக்கிறது. அங்கு ஒரே ஆண் மாணவராக இருக்கும் ஏகனுக்கும், சக மாணவியான ஸ்ரீதேவி அப்பல்லாவுக்கும் காதல் மலர்கிறது. ஆனால், காதலியிடம் ஏராளமான நிபந்தனைகளை விதிக்கும் ஏகனால் இருவரும் பிரிகின்றனர்.

கல்லூரிப் படிப்பை முடித்த ஏகன், ஐ.டி. நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணியில் சேர்கிறார். அங்கு பணிபுரிய வரும் பெமினா ஜார்ஜ், தனது காதலரின் அடக்குமுறைகளைச் சந்தித்து, அவரைப் பிரிகிறார். இதையடுத்து ஏகனுக்கும் பெமினாவுக்கும் இடையே காதல் உருவாகிறது. ஆனால், ஏகனின் முன்னாள் காதலியைப் பெமினா சந்தித்ததும், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு காதல் முறிகிறது. பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்தார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.

ஏகன் தனது இயல்பான நடிப்பால் படம் முழுவதும் கவனம் ஈர்க்கிறார். ஸ்ரீதேவி அப்பல்லா, பெமினா ஜார்ஜ் ஆகியோரும் தங்களது கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர். அதிர்ச்சி அருண், ஜென்சன் திவாகர், சுப்ரமணிய சேது, அதியமான், மைம் கோபி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் பொருத்தமான தேர்வாக அமைந்துள்ளனர். பிரியேஷ் குருசாமியின் ஒளிப்பதிவும், சித்து குமாரின் இசையும் படத்திற்குப் பலம் சேர்க்கின்றன.

ரசிக்க வைக்கும் காதல் காட்சிகள் படத்தின் முக்கிய பலம். இருப்பினும், சில இடங்களில் லாஜிக் மீறல்கள் உறுத்துகின்றன. குறிப்பாக, பெண்கள் கல்லூரியில் ஒரே ஆண் மாணவர் படிப்பதை ஏற்றுக்கொள்வது சற்றுக் கடினமாக உள்ளது. மேலும், படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். காதலும் நகைச்சுவையும் கலந்து புதுமையான காதல் கதையைச் சொல்லி இயக்குநர் யுவராஜ் சின்னசாமி கவனம் ஈர்த்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading