சைதன்யா சங்கரன் இயக்கத்தில், மறைந்த நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த் பாபு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘இது நம்ம குடும்பம்’. இப்படத்தில் சாஜிதா கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தைப் பற்றிப் பேசிய ஆனந்த் பாபு, தனது வாழ்க்கைப் பயணம் மற்றும் தந்தை கற்றுக்கொடுத்த பாடங்களை நினைவுகூர்ந்தார்.
“இது ஒரு வித்தியாசமான படம். ‘இது நம்ம குடும்பம்’ என்பதன் அர்த்தத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நான் வாழ்க்கையில் மருத்துவராகியிருக்க வேண்டியவன். பெங்களூரில் மருத்துவம் படிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், நடனத்திலும் நண்பர்களுடனும் நேரம் செலவிடுவதிலும் ஆர்வம் இருந்ததால் அங்கு செல்ல விரும்பவில்லை. அந்த நேரத்தில் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. நான் நடித்த படங்கள் வெற்றிபெற்றதால் நடிகனாகிவிட்டேன்.
என் அப்பா எனக்குக் கற்றுக்கொடுத்த முக்கியமான விஷயம், ஒரு காட்சி சிறப்பாக வரும் வரை தொடர்ந்து முயற்சி செய்வதுதான். அவர் எந்த விஷயத்திலும் எளிதில் திருப்தியடைய மாட்டார். அதுபோல ஒவ்வொரு படத்தையும் என் வாழ்க்கையின் ஒரு படியாகவும் மைல்கல்லாகவும் பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய நடிகை சாஜிதா, “இந்தப் படத்தில் நடித்து முடித்த பிறகு என் வாழ்க்கையில் புற்றுநோய் என்ற பெரிய சவால் வந்தது. மீண்டும் இங்கு வந்து நிற்பேன் என்று நினைக்கவே இல்லை. ஆனால், புற்றுநோயை வென்று இன்று உங்கள் முன்னால் வந்திருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
