கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரிலீஸை முன்னிட்டு படக்குழுவினர் பல்வேறு நகரங்களில் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கார்த்தி கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திரைப்படத் துறை தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
திரைப்படங்கள் வெளியாகும் நாளிலேயே இணையத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றப்படும் பைரசி தொடர்பாக கார்த்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு இந்தப் பிரச்சினை குறித்து நன்றாக தெரியும் என்றும், அவர் இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாகவும் தெரிவித்தார். விஜய்யை நேரில் சந்தித்தபோது, “மற்றவர்களைவிட இந்தப் பிரச்சினை உங்களுக்கு நன்றாகத் தெரியும். நீங்களே இதைக் கவனித்துக்கொள்ளுங்கள்” என்று கூறியதாகவும் கார்த்தி குறிப்பிட்டார்.இதனிடையே, தனது அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விக்கும் கார்த்தி பதிலளித்துள்ளார். அரசியலில் களமிறங்கும் எண்ணம் தன்னிடம் இல்லை என்றும், தொடர்ந்து நல்ல கதைகளையும் தரமான திரைப்படங்களையும் ரசிகர்களுக்கு வழங்குவதே தனது நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
