‘விடுதலை’ உள்ளிட்ட படைப்புகளின் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள இயக்குநர் வெற்றிமாறன், தற்போது சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். வடசென்னை களத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ‘அரசன்’ பணிகளைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படமாக ‘ராஜன் வகையறா’ குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. 2018-ம் ஆண்டு வெளியான ‘வடசென்னை’ திரைப்படத்தில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாபாத்திரத்தின் இளமைப் பருவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் கென் கருணாஸ் மற்றும் அமீர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் முதன்முறையாக இசையமைக்க இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதே கூட்டணி, தனுஷ் நடிப்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ‘தமிழ்முருகன்’ திரைப்படத்திலும் பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
