‘I Am Game’ தமிழ்ப் படம் போன்ற அனுபவத்தை தரும் – துல்கர் சல்மான் நம்பிக்கை!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I Am Game’ திரைப்படத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சி செப்டம்பர் 1-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட துல்கர் சல்மான், சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்து தனது படத்தின் சிறப்புகளை பகிர்ந்துகொள்வதை வழக்கமாக கொண்டிருப்பதாக தெரிவித்தார். ரசிகர்களுக்கு படம் பிடித்தால், அவர்கள் தங்களது ஆதரவை நிச்சயம் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.

‘I Am Game’ திரைப்படத்தைப் பொறுத்தவரை, தமிழ் ரசிகர்களுக்கு இது ஒரு நேரடி தமிழ்ப் படம் போன்ற உணர்வை ஏற்படுத்தும் என்று துல்கர் குறிப்பிட்டார். காரணம், இதில் ஏராளமான தமிழ் நடிகர்கள் இடம்பெற்றிருப்பதுடன், தங்களது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட படங்களில் இதுவே மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக கதிரின் நடிப்பு இயல்பான தன்மையுடனும், கதாபாத்திரத்திற்கு ஏற்ற ஆழத்துடனும் அமைந்துள்ளதாக அவர் பாராட்டினார்.

அதேபோல், மிஷ்கினின் பங்களிப்பும் படத்திற்கு முக்கியமான பலமாக இருப்பதாக துல்கர் சல்மான் கூறினார். அவரிடம் காணப்படும் ஆற்றலும் உற்சாகமும் தனித்துவமானது என்றும், இன்றைய இளம் தலைமுறையினரிடையே கூட அந்த அளவிலான எனர்ஜியை பார்ப்பது அரிது என்றும் குறிப்பிட்டார். சம்யுக்தா விஸ்வநாதனுக்கும் இந்தப் படம் திரையுலகில் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், ஆண்டனி வர்கீஸ் பெப்பேவின் நடிப்பையும் அவர் வெகுவாக பாராட்டினார். மலையாளத்தில் முன்னணி திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வரும் அவர், ‘I Am Game’ படத்திலும் ரசிகர்களை கவரும் வகையில் சிறப்பாக பங்களித்துள்ளதாக துல்கர் தெரிவித்தார். அவரை தமிழ் ரசிகர்களும் நிச்சயம் வரவேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தினார்.மேலும் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்க வேண்டும் என்றும் துல்கர் சல்மான் கேட்டுக்கொண்டார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading