தொடர்ச்சியாக திரைப்படப் பணிகளில் பிஸியாக இயங்கி வந்த நடிகை மமிதா பைஜூ உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ மற்றும் நிவின் பாலியின் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்த நிலையில் அவருக்கு உடல்நலப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ஆஸ்திரேலியாவின் க்ளைடில் உள்ள மலையாளி சமூகத்தினருக்காக வெளியிட்ட வீடியோவில், செப்டம்பர் 5-ம் தேதி அங்கு நடைபெறவிருந்த ஓணம் நிகழ்ச்சியில் தன்னால் பங்கேற்க முடியாது என மமிதா தெரிவித்திருந்தார். அவரது உடல்நிலை காரணமாக அந்த நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த மமிதா, தன்னால் முடிந்திருந்தால் நிச்சயம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பேன் என்றும் கூறியிருந்தார். ஆனால் அதிக காய்ச்சல், உடல் வலி, அலர்ஜி மற்றும் ஆஸ்துமா பாதிப்பு காரணமாக பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாகவும், மருத்துவர்கள் முழுமையான ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.இந்நிலையில், மமிதா பைஜூவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
—
