‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ படத்தில் மிரட்டும் வித்யுத் ஜம்வால் – வெளியான தமிழ் டிரெய்லர்!

தமிழ் சினிமாவில் ‘துப்பாக்கி’, ‘அஞ்சான்’, ‘மதராஸி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால், தற்போது ஹாலிவுட்டிலும் தனது ஆக்ஷன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். கேப்காமின் பிரபல வீடியோ கேம் தொடரை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தில் அவர் தல்சிம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். களரி உள்ளிட்ட பல்வேறு தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்றிருக்கும் வித்யுத்தின் அதிரடி சண்டைக் காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

கிட்டாவோ சகுராய் இயக்கியுள்ள இப்படத்தின் கதை 1993-ம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற ‘World Warrior Tournament’ போட்டியை மையமாக வைத்து சம்பவங்கள் நகர்கின்றன. ஆண்ட்ரூ கோஜி ரியூவாகவும், நோவா சென்டினியோ கென் மாஸ்டர்ஸாகவும், காலினா லியாங் சுன்-லியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜேசன் மோமோவா, ஜோ “ரோமன் ரெய்ன்ஸ்” அனோவாயி, கோடி ரோட்ஸ், 50 சென்ட் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ படத்தின் புதிய தமிழ் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் வித்யுத் ஜம்வாலின் அதிரடி காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. குறிப்பாக தல்சிம் கதாபாத்திரத்திற்காக யோகா மற்றும் உடலின் நெகிழ்வுத்தன்மையை பயன்படுத்தி அவர் வெளிப்படுத்தியுள்ள வித்தியாசமான சண்டை முறைகள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading