‘மின்சார கனவு’ திரைப்படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘மூன்வாக்’. கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒன்றாக பணியாற்றியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கியுள்ளார். நடனம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் பிரபுதேவாவுடன் ஏ.ஆர்.ரஹ்மான், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
நீண்ட காலமாக நடைபெற்று வந்த ‘மூன்வாக்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதையடுத்து ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் படத்தின் வெளியீட்டு அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ‘மூன்வாக்’ திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதே காலகட்டத்தில் பிரபுதேவா மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள ‘பேங் பேங்’ திரைப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், ரசிகர்களுக்கு பிரபுதேவாவின் அடுத்தடுத்து இரண்டு படங்களை திரையில் காணும் வாய்ப்பு கிடைக்கலாம்.
