‘ஹாய்’ திரைப்படம் எப்படி‌ இருக்கு? -திரை விமர்சனம்!

காதல் திருமணம் மீதான நம்பிக்கையுடன் வீட்டை விட்டு வெளியேறும் கவினின் வாழ்க்கையில், எதிர்பாராத விதமாக நயன்தாரா அறிமுகமாகிறார். திருமணத்தைத் தவிர்த்து சுயமாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்கு வரும் நயன்தாராவும் அவருடன் நட்பாகப் பழகுகிறார். நாளடைவில் இந்த நட்பு கவினுக்குள் காதலாக மாறுகிறது.

ஆனால், திருமண உறவில் விருப்பமில்லாத நயன்தாராவிடம் தனது காதலை வெளிப்படையாக சொல்லாமல் கவின் ஒருதலையாக காதலித்து வருகிறார். சூழ்நிலை காரணமாக இருவரும் கணவன் – மனைவியாக நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நயன்தாராவின் மனதை மாற்ற கவின் முயற்சிப்பதே கதையின் முக்கியப் பயணமாக அமைந்துள்ளது. இறுதியில் இந்த போலி உறவு உண்மையான காதலாக மாறியதா என்பதுதான் படத்தின் மையக்கரு.

கொங்கு இளைஞராக தோன்றும் கவின், காதல், ஏமாற்றம், எதிர்பார்ப்பு என கதாபாத்திரத்தின் பல்வேறு உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்துகிறார். நகைச்சுவைப் பகுதிகளிலும் தனது பங்களிப்பால் ரசிக்க வைக்கிறார். சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி ஆகியோரின் கூட்டணி பல காட்சிகளில் சிரிப்பை ஏற்படுத்துகிறது.

மறுபுறம், நயன்தாரா வழக்கமான ஸ்டைலான தோற்றத்துடன் திரையில் கவனம் ஈர்ப்பதுடன், தனது அனுபவமான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும், இருவருக்குமான வயது வித்தியாசம் சில இடங்களில் கண்களுக்கு புலப்படுகிறது. ராதிகா, கே.பாக்யராஜ், பிரபு உள்ளிட்ட மூத்த நடிகர்களின் நடிப்பும் கதைக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது.

காதல் கதையை மிகப்பெரிய திருப்பங்களால் நிரப்பாமல், உறவுகளையும் மனித உணர்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் விஷ்ணு எடவன். நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் இரண்டையும் சரியான அளவில் கலந்து படத்தை நகர்த்தியிருக்கிறார். ராஜேஷ் சுக்லாவின் ஒளிப்பதிவும், ஜென் மார்ட்டினின் இசையும் படத்தின் ரசிப்புத்தன்மைக்கு துணை நிற்கின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading