‘டாக்சிக்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

1950-களின் கோவாவை களமாகக் கொண்டு அதிகாரம், துரோகம், குடும்பப் பகை என பல அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது ‘டாக்சிக்’. கோவாவை அடுத்ததாக யார் ஆள வேண்டும் என நினைக்கும் கங்கா, தனது தம்பி ராயாவை அந்த இடத்தில் பார்க்க விரும்புகிறார். இதற்கிடையில் சர்க்கஸ் குழுவுடன் வரும் நாடியாவுக்கும் ராயாவுக்கும் காதல் உருவாகிறது. ஆனால், சூழ்நிலைகள் அவர்களது வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிடுகின்றன. கங்காவின் மரணத்திற்கு நாடியா காரணமாகும் நிலையில், அவளையும் குழந்தையையும் ராயா வெறுத்து விலக்குகிறார். பின்னர் தாயை இழந்த மகன், தந்தையை பழிவாங்க புறப்படுகிறான். இந்தப் பயணத்தில் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதையாக விவரிகின்றன.

ராயா என்ற கதாபாத்திரத்தை யஷ் வெவ்வேறு வயது நிலைகளில் ஏற்று நடித்துள்ளார். இளமைக்கால ராயாவாக ஆக்ஷன் காட்சிகளில் அவரது வழக்கமான ஸ்டைல் கைகொடுக்கிறது. கோபம், அமைதி என பல தருணங்களில் அவரது உடல்மொழி ரசிக்க வைக்கிறது. அதேநேரம் வயதான தோற்றத்துக்கான மேக்கப் இன்னும் இயல்பாக அமைந்திருக்கலாம். மகன் கதாபாத்திரத்தில் வரும் யஷின் உடல்மொழி சில இடங்களில் கதைக்கு பொருந்தினாலும், பல காட்சிகளில் நடிப்பு அளவுக்கு அதிகமாகத் தெரிகிறது. நயன்தாரா கங்காவாக தம்பியின் மீது கொண்ட பாசத்தை அமைதியான நடிப்பால் வெளிப்படுத்துகிறார். கியாரா அத்வானியும் காதல் மற்றும் வேதனை நிறைந்த காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். ஹூமா குரேஷி, ருக்மிணி வசந்த் ஆகியோருக்கு முக்கியத்துவம் இருந்தாலும், அவர்களது கதாபாத்திரங்கள் அழுத்தமாக பதிவாகவில்லை.

படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு அமைந்துள்ளது. பழைய கோவாவின் இருண்ட கேங்ஸ்டர் உலகம் முதல் பனிமலை, காடு என மாறுபட்ட களங்கள் வரை காட்சிகளில் பிரமாண்டம் தெரிகிறது. ஆக்ஷன் காட்சிகளில் ஸ்டன்ட் குழுவின் உழைப்பும் வெளிப்படையாக தெரிகிறது. ஆனால், உஜ்வால் குல்கர்னியின் படத்தொகுப்பு படத்தின் நீளத்தைக் குறைக்கத் தவறியிருக்கிறது. தேவையற்ற நீளம் காரணமாக பல இடங்களில் சோர்வு ஏற்படுகிறது. சில காட்சிகளின் முடிவுகளும் இயல்பாக அமையவில்லை.

ரவி பஸ்ரூரின் பின்னணி இசை சில ஆக்ஷன் காட்சிகளுக்கு வலு சேர்த்தாலும், முக்கியமான உணர்வுப்பூர்வ தருணங்களில் அதே அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பல இசையமைப்பாளர்கள் இணைந்து உருவாக்கிய பாடல்களிலும் பெரிய ஈர்ப்பு இல்லை. மறுபுறம், பிரமாண்டமான செட்கள் மற்றும் இயற்கை பின்னணிகளை சிறப்பாக பயன்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது. கீது மோகன்தாஸ் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் கதையை நகர்த்த முயன்றிருக்கிறார். ஆனால், கதாபாத்திரங்களின் பின்னணி மற்றும் ‘டாக்சிக்’ உலகம் குறித்து தொடக்கத்திலேயே போதிய தெளிவு இல்லாததால், பார்வையாளர்கள் கதையுடன் ஒன்றுவதில் சிரமம் ஏற்படுகிறது.

தாயின் மரணத்திற்கு காரணமான தந்தையை மகன் பழிவாங்குவது என்ற அடிப்படையான கதைக்குள் வித்தியாசமான திருப்பத்தை இணைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், அந்த முயற்சி முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக, கதையின் பல நிகழ்வுகளுக்கு இடையிலான தொடர்பும் லாஜிக்கும் தெளிவாக இல்லாததால் திரைக்கதை தடுமாறுகிறது. காட்சிகளில் பிரமாண்டமும் ஆக்ஷனும் இருந்தாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை வலுவாக கடத்த முடியவில்லை. பார்வைக்கு பிரம்மாண்டமாகத் தெரியும் ‘டாக்சிக்’, உணர்வில் அழுத்தமான அனுபவத்தை வழங்கத் தவறிய படைப்பாகவே நிற்கிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading