ரவி தேஜா நடிப்பில் வெளியாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் வசூலிலும் வேகமாக முன்னேறி வருகிறது. சிவா நிர்வாணா இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், கதாநாயகனின் மனைவி மற்றும் குழந்தையின் தாய் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெளியான நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ.100 கோடி வசூலை இப்படம் கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
படத்தில் தாயாக தோன்றியது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய பிரியா பவானி சங்கர், அந்த கதாபாத்திரத்தை ஏற்க தனக்கு எந்த தயக்கமும் ஏற்படவில்லை என கூறியுள்ளார். வாழ்க்கையில் தனக்கு 20 வயதிலேயே திருமணம் நடைபெற்றிருந்தால், தற்போது குழந்தை இருந்திருக்கும் என்றும், அதனால் திரையில் தாயாக நடிப்பதை வித்தியாசமாக பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘இருமுடி’யின் கதையை முதன்முறையாக கேட்டபோதே அதன் தாக்கம் தன்னை வெகுவாக பாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திரைக்கதையை இயக்குநர் வழங்கிய நேரத்திலேயே கதை செல்லும் பாதையை தன்னால் புரிந்துகொள்ள முடிந்ததாகவும், மிகவும் ஆழமான உணர்வுகளை கொண்டிருந்ததால் இப்படத்தில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டதாகவும் பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.
