நடிகை சமந்தா ரூத் பிரபு, கர்ப்பகாலத்தில் தான் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். வழக்கமாக உடற்பயிற்சி மற்றும் உடல்தகுதியில் அதிக கவனம் செலுத்தி வரும் சமந்தா, கர்ப்ப காலத்தில் உடலின் மாற்றங்களுக்கு ஏற்ப உடற்பயிற்சியின் நோக்கங்களும் முறைகளும் மாற வேண்டும் என்பதை தனது பதிவின் மூலம் எடுத்துரைத்துள்ளார்.
கர்ப்ப காலத்தில் உடல் ஒரு புதிய உயிரை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதால், வழக்கமான உடற்பயிற்சி இலக்குகளை அப்படியே தொடர முடியாது என சமந்தா குறிப்பிட்டுள்ளார். உடல் அளிக்கும் சோர்வு மற்றும் தேவையான ஓய்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், அதற்கேற்ப பயிற்சிகளிலும் மாற்றங்களைச் செய்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்த வீடியோவில் செஸ்ட் பிரஸ், கெட்டில்பெல் பயிற்சி, டெட்லிஃப்ட் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளைச் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதேவேளையில், தனது உடற்பயிற்சி முறைகளைப் பார்த்து மற்றவர்கள் அவற்றை நேரடியாகப் பின்பற்றக் கூடாது என்றும் சமந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். பல ஆண்டுகளாக உடற்பயிற்சி செய்து வரும் தனக்கு மருத்துவரின் அனுமதியும், சான்றிதழ் பெற்ற கர்ப்பகால பயிற்சியாளரின் கண்காணிப்பும் இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு பெண்ணின் கர்ப்பகால அனுபவமும் மாறுபடும் என்பதால், பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தனது கர்ப்பத்தை சமந்தா சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துகொண்டுள்ள அவர், தான் நடித்து தயாரித்த ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்றபோது, விரைவில் மகப்பேறு விடுமுறையில் செல்ல இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அந்த இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார என்பது குறிப்பிடத்தக்கது.
