ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தின் பணிகளில் தற்போது பிஸியாக இருக்கிறார் மகேஷ் பாபு. பிரியங்கா சோப்ரா, பிரித்திவிராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் 2027 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கிடையே, அடுத்ததாக அனில் ரவிபுடி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க இருப்பதாக டோலிவுட்டில் தகவல் பரவியது.
‘வாரணாசி’ முடிந்ததும் குறுகிய காலத்தில் நிறைவடையும் படத்தில் மகேஷ் பாபு நடிக்கப் போவதாக வெளியான செய்தி ரசிகர்களிடையே பல்வேறு கருத்துகளை உருவாக்கியது. குறிப்பாக, மகேஷ் பாபு தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும், அடுத்த படமும் அதே அளவிலான எதிர்பார்ப்பை கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர்.
இந்த தகவல் குறித்து அனில் ரவிபுடியே தற்போது தெளிவுபடுத்தியுள்ளார். மகேஷ் பாபு தன்னுடைய அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர் என்றும், அவருடன் தொடர்புடையதாக வெளியாகும் தற்போதைய செய்திகள் உண்மையல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆதாரமற்ற தகவல்களை நம்பாமல் இருப்பதுடன், அவற்றை மற்றவர்களுக்கும் பகிர வேண்டாம் எனவும் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
