ஒரு சாதாரண காட்டுப் பயணம் எப்போது ஆபத்தான அனுபவமாக மாறுகிறது என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘தி வான்: போர்ஸ் ஆப் தி பாரஸ்ட்’. சித்தார்த் மல்ஹோத்ரா, தமன்னா இணைந்து நடித்துள்ள இப்படத்தை தீபக் மிஸ்ரா இயக்கியுள்ளார். தற்போது வெளியான 1 நிமிடம் 56 வினாடிகள் கொண்ட டீசர், வித்தியாசமான கதைக்களத்தை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
மனிதர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் மர்மமான வனப்பகுதியே கதையின் மையமாக தெரிகிறது. அங்கு சென்றவர்கள் மீண்டும் உயிருடன் திரும்பியதில்லை என்ற அச்சுறுத்தல் இருந்தபோதிலும், கதாநாயகன் எதிர்பாராத விதமாக அந்த இடத்திற்குள் செல்கிறார். அங்கு அவரைச் சுற்றி நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களும், மர்ம சக்தியும் படத்தின் முக்கிய திருப்பங்களாக இருக்கும் வகையில் டீசர் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் தமன்னா பாட்டியா முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். சுனில் குரோவர், மணீஷ் பால், ஸ்வேதா திவாரி, அனூப் சோனி உள்ளிட்டோரும் படத்தில் நடித்துள்ளனர். பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் சார்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஏக்தா கபூர், அருணாப் குமார், நீரஜ் கோத்தாரி ஆகியோர் தயாரித்துள்ளனர். செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தின் டீசர் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
