இசையமைப்பாளராக பல மொழிகளில் பிஸியாக இயங்கி வரும் ஜி.வி.பிரகாஷ் குமார், நடிப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், தற்போது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘இம்மோர்டல்’. அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியுள்ள இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்க, டி.எம். கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு முதலில் ஜூலை 23-ம் தேதி திரையரங்கு வெளியீடு என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே தேதியில் முதல்-அமைச்சர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘இம்மோர்டல்’ படத்தின் வெளியீடு மாற்றப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 4-ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மற்றும் கதைக்களம் குறித்த சில காட்சிப்படுத்தல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. டிரெய்லருக்கு கிடைத்துள்ள வரவேற்பால், செப்டம்பர் 4-ம் தேதி வெளியாக உள்ள ‘இம்மோர்டல்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
