கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுட்டாரியா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி பான் இந்தியா அளவில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளுடன் ஆங்கிலத்திலும் இப்படம் திரைக்கு வருகிறது. சென்னையில் நடைபெற்ற படத்தின் நிகழ்ச்சியில் பேசிய யஷ், தமிழக ரசிகர்கள் தனக்கு அளித்துவரும் அன்பை குறிப்பிட்டு நெகிழ்ச்சியுடன் பேசினார். “வணக்கம் சென்னை… இந்த அன்பிற்கு நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ‘என் இரத்தத்தில் இரத்தமான’ என்று சொல்லலாம் என்றால் அதை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சொல்லிவிட்டார். ‘என்னை வாழவைத்த தெய்வங்களே’ என்று சொல்லலாம் என்றால் தலைவர் ரஜினிகாந்த் சார் சொல்லிவிட்டார். ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்று சொல்லலாம் என்றால் தளபதி விஜய் சார் சொல்லிவிட்டார். அதனால், என்னை தத்தெடுத்த தமிழ்மக்களே என்கிறேன் என்றார்.
‘கே.ஜி.எப் 1’ வெளியீட்டின்போது தமிழ் ரசிகர்கள் மீது தனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்ததாக கூறிய யஷ், எந்தவித வேறுபாடும் பார்க்காமல் தன்னை ஏற்றுக்கொண்டு அன்பு செலுத்தியதற்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்தபோதும், படக்குழுவின் உழைப்பை மதித்து ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்த்ததை யஷ் குறிப்பிட்டார். விஜய் மீதான அன்புடனும், தயாரிப்பாளரின் முயற்சியை மதித்தும் ரசிகர்கள் செய்த இந்த செயல் பாராட்டுக்குரியது என்றும், சினிமா மற்றும் அதன் பின்னணியில் இருக்கும் உழைப்பை மதிக்கும் தமிழக மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
‘டாக்சிக்’ படத்தின் தமிழ் வசனங்களை எழுதிய கணேஷ் மற்றும் பாடல்களுக்கு உதவிய விக்கி ஆகியோருக்கும் யஷ் நன்றி தெரிவித்தார். நயன்தாரா தனக்கு மிகவும் பிடித்த நடிகை மட்டுமல்லாமல், சிறந்த மனிதர் என்றும் அவர் பாராட்டினார். மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட தீவிரமான மற்றும் வித்தியாசமான முயற்சியாக ‘டாக்சிக்’ உருவாகியுள்ளதாக கூறிய யஷ், புதுமையான படைப்புகளுக்கு எப்போதும் ஆதரவு அளிக்கும் தமிழ் ரசிகர்கள் இந்தப் படத்தையும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். ‘கே.ஜி.எப்’ படத்திற்கு அளித்த ஆதரவைப் போலவே ‘டாக்சிக்’ படத்திற்கும் ரசிகர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இயக்குநர் கீது மோகன்தாஸின் திறமை மற்றும் உழைப்பை ரசிகர்கள் திரையில் பார்க்க முடியும் என்று கூறிய யஷ், சென்னையைச் சேர்ந்த பல கலைஞர்கள், செட் அமைப்பாளர்கள், ஸ்டண்ட் கலைஞர்கள் உள்ளிட்டோர் இப்படத்தில் பணியாற்றியுள்ளதாக தெரிவித்தார். சினிமா என்பது ஒரு மொழி அல்லது மாநிலத்துக்குள் மட்டுப்பட்டது அல்ல என்றும், பல்வேறு மொழிகள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து உருவாக்கும் கூட்டு முயற்சியே இந்திய சினிமா என்றும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து விஜய்யின் அர்ப்பணிப்பையும் யஷ் பாராட்டினார்.
தமிழக மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் அவருக்கு வழங்கியுள்ள பொறுப்பும் மிகப்பெரியது என்றும், மக்களுக்காக அவர் காட்டும் அர்ப்பணிப்பு அளப்பரியது என்றும் கூறினார். மக்கள் தங்களுக்கு வழங்கும் அன்பை மீண்டும் அவர்களுக்கே திருப்பிக் கொடுப்பதே நடிகர்களின் கடமை என்றும், “நாங்கள் சாதாரண மனிதர்கள். மக்கள் தான் எங்களை ஹீரோவாக ஆக்குகிறார்கள். அவர்களை மகிழ்விப்பது மட்டுமே எங்கள் கடமை” என யஷ் தெரிவித்தார்.
