கிரிஷ் இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த மலையாளத் திரைப்படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. வெளியானது முதல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இப்படம், இதுவரை ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றிப் படமாகியுள்ளது.
மலையாளத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 4-ம் தேதி இரு மொழிகளிலும் இப்படம் திரைக்கு வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. நடிகர் பகத் பாசில் உள்ளிட்டோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
கடந்த சில படங்களின் தோல்வியால் பின்னடைவை சந்தித்த நிவின் பாலிக்கு, கடந்த ஆண்டு வெளியான ‘சர்வம் மாயா’ ரூ.150 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ‘பேபி கேர்ள்’ எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ மீண்டும் வெற்றியை தேடித் தந்துள்ளதால், இப்படத்தின் தமிழ் பதிப்புக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
—
