மனைவி பிரியா பவானி சங்கர் மற்றும் மகள் நட்சத்திராவுடன் வாழ்ந்து வரும் ரவி தேஜா, குடிப்பழக்கத்திற்கு அடிமையானவராக இருக்கிறார். வாழை சாகுபடி செய்து குடும்பத்தை நடத்தும் அவர், குடிகாரராக இருந்தாலும் மகள் மீது அளவில்லாத பாசம் கொண்ட தந்தையாக இருக்கிறார். பெண்கள் தங்களுக்கான பிரச்சனைகளை தயக்கமின்றி வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் மகளை வளர்க்கும் நிலையில், பள்ளியில் சில குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சம்பவம் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
தனது மகள் நட்சத்திரா மூலம் இந்த விஷயம் ரவி தேஜாவுக்கு தெரியவர, குற்றத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்க முடிவு செய்கிறார். இதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதையே கதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. தந்தை–மகள் உறவையும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும் இணைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
ரவி தேஜா முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட அதேநேரத்தில் மகள் மீது பாசம் கொண்ட தந்தை கதாபாத்திரத்தை உடல்மொழி, ஆக்ரோஷம் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகள் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். பிரியா பவானி சங்கர் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். சிறுமி நட்சத்திரா துடிப்பான நடிப்பால் கவனம் பெறுகிறார். சாய்குமார், அஜய் கோஷ், சுவாசிகா ஆகியோரும் தங்களது கதாபாத்திரங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
தொழில்நுட்ப ரீதியாகவும் படத்திற்கு தேவையான பலம் கிடைத்துள்ளது. விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவு ஐயப்பன் கோவில் காட்சிகள் மற்றும் மலைப்பகுதி பயணத்தை அழகாக காட்சிப்படுத்துகிறது. ஜி.வி. பிரகாஷ் குமாரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் உணர்வுபூர்வமான தருணங்களுக்கு கூடுதல் வலு சேர்க்கின்றன.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மையமாக வைத்து அழுத்தமான கருத்தை முன்வைத்திருப்பதும், குழந்தைகள் தங்கள் பிரச்சனைகளை பெற்றோரிடம் வெளிப்படையாக பேசும் சூழலை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதும் படத்தின் முக்கிய பலமாக உள்ளது. முதல் பாதியின் இயல்பான நகர்வு கவனம் ஈர்க்கும் நிலையில், இரண்டாம் பாதியில் இடம்பெறும் அதிகப்படியான சென்டிமெண்ட் மற்றும் சில திடீர் திருப்பங்கள் வேகத்தை சற்று பாதிக்கின்றன. இருப்பினும், தந்தை–மகள் பாசத்துடன் சமூக கருத்தையும் ஆக்ஷன் மற்றும் சென்டிமெண்ட் அம்சங்களோடு இணைத்துள்ள படைப்பாக ‘இருமுடி கட்டு’ அமைந்துள்ளது.
