இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் தாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சினிமாவில் நடிகைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய காஜல் அகர்வால், பொதுவாக திரைப்படத் துறையின் மீது தனக்கு சிறிய அளவில் அதிருப்தி இருப்பதாக தெரிவித்தார். நடிகர்களுடன் ஒப்பிடும்போது நடிகைகள்தான் அதிக சவால்களை சந்திக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.குறிப்பாக, ஒரு நடிகைக்கு திருமணம் முடிந்துவிட்டாலே அவரது திரைப்பயணம் முடிந்துவிட்டது போல் சினிமா துறையினர் அணுகுவதாக காஜல் கூறினார். மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் நடிகையாக இருந்தாலும் திருமணத்திற்குப் பிறகு அவரை ஓரங்கட்டவும், வாய்ப்புகளை குறைக்கவும் முயற்சிப்பது மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
திறமைக்கு எந்தவிதமான தடையும் போட முடியாது என்று குறிப்பிட்ட காஜல், திறமை இருக்கும் நடிகைகள் எந்த வயதிலும் தொடர்ந்து நடிக்க முடியும் என்றும், அதற்கு பல முன்னணி நடிகைகளை உதாரணமாகக் கூற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
—
