மோகன்லால் நடிப்பில் தருண் மூர்த்தி இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘அதிமனோகரம்’. இதில் ஐயப்ப பக்தி கொண்ட காவல்துறை அதிகாரியாக மோகன்லால் நடித்து வருவதாக கூறப்படுகிறது. படத்தின் சில காட்சிகளை சபரிமலையில் படமாக்க தேவசம் போர்டு சார்பில் சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டு படப்பிடிப்பும் நடைபெற்றது.
சபரிமலை கோவில் வளாகத்தில் திரைப்பட படப்பிடிப்பு நடத்தப்படுவது தொடர்பாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. கோவிலின் புனிதத்தன்மை பாதிக்கப்படக்கூடும் என்று சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், படப்பிடிப்பில் பங்கேற்கும் அனைவரும் கோவில் விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் முறையாக கடைப்பிடிப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கேரள தேவசம் போர்டு அமைச்சர் கே.முரளிதரன் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். சபரிமலையில் பொதுவான திரைப்படங்களின் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க முடியாது என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.அதேவேளையில், சபரிமலை கோவில் அல்லது ஐயப்பனை மையமாக வைத்து உருவாகும் திரைப்படங்கள் மற்றும் ஆன்மிகம் சார்ந்த படங்களுக்கு மட்டும் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். சாதாரண திரைப்படங்களின் படப்பிடிப்புக்காக சபரிமலை கோவில் வளாகத்தை வழங்குவது அரசின் கொள்கை அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
