பாலிவுட் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வந்த அனன்யா ராஜ் சென்குப்தா தனது 27-வது வயதில் உயிரிழந்த சம்பவம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1998 ஆகஸ்ட் 10-ஆம் தேதி பிறந்த இவர், இசை வீடியோக்கள் மூலம் கலைத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார். டி-சீரிஸ், டைம்ஸ் சீரிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் இசை வீடியோக்களில் தோன்றிய அனன்யா, பின்னர் 2016-ஆம் ஆண்டு வெளியான ‘7 ஹவர்ஸ் டு கோ’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ‘தி பைனல் எக்சிட்’, ‘கோஸ்ட்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.
தெலுங்கு திரையுலகிலும் தனது நடிப்பைத் தொடர்ந்த அவர், 2022-ஆம் ஆண்டு வெளியான ‘தகடே லே’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதுதவிர, மூன்று மொழிகளில் வெளியான ‘மெட்ராஸ் கேங்’ படத்திலும் நடித்துள்ளார். குறிப்பாக ‘கோஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் அவர் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றார்.கடந்த ஓராண்டு அனன்யாவுக்கு மிகவும் கடினமான காலகட்டமாக இருந்ததாக அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளை அவர் ஒரு வீராங்கனையைப் போல துணிச்சலுடன் எதிர்கொண்டதாகவும் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கடினமான காலத்தில் அனன்யாவின் தாய் மஞ்சு குப்தா மற்றும் அவரது இளைய சகோதரர்களான ராகுல், ரோகித் ஆகியோர் அவருக்கு உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினரால் அன்புடன் ‘பச்சா’ என்று அழைக்கப்பட்ட அனன்யாவின் மறைவு அவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இளம் வயதிலேயே திறமையான நடிகையை திரையுலகம் இழந்துவிட்டதாக அகில இந்திய திரைப்பட ஊழியர்கள் சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது. அனன்யாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளது.
