சென்னை கலைவாணர் அரங்கில் மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோரின் நினைவாக “ராஜகோபுரங்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது பாக்யராஜின் 50-வது ஆண்டு பொன்விழாவின்போது தான் வழங்கிய தங்கச் செயினை அவர் இறுதிவரை அணிந்திருந்ததாக பூர்ணிமா தெரிவித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
ஒருவரிடம் இருக்கும் தனித்துவமான விஷயங்களை கண்டறிந்து, அவற்றை எப்படி ஒரு படைப்பாக மாற்றலாம் என்று சிந்திப்பவர் பாரதிராஜா என ரஜினிகாந்த் கூறினார். அதேபோல், ஒரு கதையை கேட்டுக்கொண்டிருக்கும்போதே அதை உள்வாங்குவதுடன், வேறொரு கோணத்தில் எப்படி திரைக்கதையாக மாற்றலாம் என்பதையும் ஒரே நேரத்தில் யோசிக்கும் திறமை பாக்யராஜிடம் இருந்ததாக புகழாரம் சூட்டினார். பாரதிராஜா கேமராவை கிராமங்களுக்குள் கொண்டு சென்று, டெய்லர், பார்பர் போன்ற இயல்பான கதாபாத்திரங்களை மையமாக வைத்து திரைப்படங்களை உருவாக்கி வெற்றி பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னணி கதாநாயகர்களின் பழைய பிம்பங்களை உடைத்தது தான் மட்டுமல்ல என்றும், அதற்கு முன்பாகவே பாரதிராஜா தனது படைப்புகள் மூலம் அந்த மாற்றத்தை ஏற்படுத்திவிட்டார் என்றும் ரஜினிகாந்த் கூறினார். இருவரும் கற்பனை செய்ய முடியாத பல விஷயங்களை சினிமாவில் செய்து காட்டிய ஜாம்பவான்கள் என்றும், குறிப்பாக பாரதிராஜா இயக்கிய ‘முதல் மரியாதை’ திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்தமான படம் என்றும் அவர் தெரிவித்தார்.
வெற்றி என்பது திறமை மற்றும் உழைப்பால் மட்டுமே கிடைத்துவிடும் என்பதை தன்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. பல திறமையாளர்கள் கடினமாக உழைத்தாலும் அனைவருக்கும் சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை என்றார். பாரதிராஜாவும் பாக்யராஜும் கடவுள் அனுப்பிய குழந்தைகள் போன்றவர்கள் என்றும், அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பே அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
