“67 ஆண்டுகள் அல்ல, உண்மையில் கற்றது 20 ஆண்டுகள் மட்டுமே” – கமல்ஹாசன் பதிவு!

தமிழ் சினிமாவின் பல தலைமுறைகளைக் கடந்து பயணித்த நடிகர் கமல்ஹாசன், இந்திய திரைத்துறையில் தனது 67-வது ஆண்டை எட்டியுள்ள நிலையில், ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘களத்தூர் கண்ணம்மா’வில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் நடன உதவியாளராகவும், துணை வேடங்களிலும், அதன் பிறகு கதாநாயகனாகவும் வளர்ந்து இந்திய சினிமாவின் முக்கியமான கலைஞர்களில் ஒருவராக மாறினார்.தனது பதிவில், “எனது 67 ஆண்டுகால பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ஆனால் அந்த 67 ஆண்டுகளில் உண்மையான கற்றலாக நான் கருதுவது சுமார் 20 ஆண்டுகள் மட்டுமே” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சினிமாவை அவர் ஒரு தனிப்பட்ட சாதனையாக அல்ல, “கூட்டுச் சினிமா” என்ற பெரிய கலை வடிவமாகப் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கலைஞர்களும் ரசிகர்களும் அந்தப் பெரிய கடலை நோக்கியே பயணித்து வருகிறோம் என்ற கருத்தையும் பகிர்ந்துள்ளார்.

திரைப்பட வரலாற்றை நினைவுபடுத்திய கமல், லுமியர் சகோதரர்களின் முதல் திரைப்படக் காட்சிக்குப் பிறகு சினிமா சுமார் 130 ஆண்டுகளாக இயங்கி வருகிறது என்றும், அதில் பாதிக்கும் மேற்பட்ட காலத்தை தான் இந்தத் துறையில் கழித்திருப்பதாக தனது குழுவினர் கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால், அந்த எண்ணிக்கையை விட இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது என்ற உணர்வே தன்னிடம் இருப்பதாகவும், “திரைத்துறையைப் பொறுத்தவரை ஜென்-இசட் தலைமுறையில் மிகவும் வயதானவன் நானாக இருக்கலாம்” என்று நகைச்சுவையுடன் பதிவு முடித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading