15 நாட்களுக்கு ஒருமுறை பாஸ்வேர்டை மாற்றுகிறேன்: நாகார்ஜுனா பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

தெலுங்கு சினிமாவின் மூத்த முன்னணி நடிகரான நாகார்ஜுனா தற்போது தனது 100-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் நடைபெற்ற தெலங்கானா சைபர் பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவர், சைபர் குற்றங்கள் குறித்த தனது அனுபவங்களையும் அச்சங்களையும் பகிர்ந்துகொண்டார்.

தனது செல்போன் மற்றும் வீட்டின் வைஃபை இணைப்பை ஹேக் செய்துவிடுவார்களோ என்ற அச்சம் தனக்கு எப்போதும் இருப்பதாக நாகார்ஜுனா தெரிவித்துள்ளார். இதனால் 15 நாட்களுக்கு ஒருமுறை செல்போன் பாஸ்வேர்டை மாற்றுவதாகவும், அதேபோல் வீட்டின் வைஃபை பாஸ்வேர்டையும் அடிக்கடி மாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். பிரபலமாக இருப்பதால் தனிப்பட்ட விஷயங்களிலும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கி அதிகாரி எனக் கூறிக்கொண்டு ஒருவர் தன்னைத் தொடர்புகொண்டு பங்கு முதலீடு குறித்து பேசியதாகவும் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார். வழக்கமாக தனது வங்கியின் தொடர்பு மேலாளரே அழைப்பார் என்பதால், அந்த அழைப்பு மீது சந்தேகம் ஏற்பட்டதாகவும், முதலீடு செய்யும்படி தொடர்ந்து வலியுறுத்தியபோதும் தான் சம்மதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுபோன்று சுங்கத்துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளின் பெயர்களை பயன்படுத்தியும் தனக்கு அழைப்புகள் வந்ததாக நாகார்ஜுனா தெரிவித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக தனது உறவினர் சைபர் குற்றப்பிரிவைத் தொடர்புகொண்டதால் பிரச்சினையைத் தவிர்க்க முடிந்ததாகவும், இதுபோன்ற சந்தேகத்திற்குரிய அழைப்புகள் வரும்போது அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading